Tuesday 19 June 2012

நேர்முகத் தேர்விற்கான குறிப்புகள்


நேர்முகத் தேர்விற்கு செல்லும் போது தங்களின் நிறத்திற்கு ஏதுவான நிறத்தில் உடைகளை அணியவும்.  கண்ணை உறுத்தும் அல்லது பளபளக்கும் உடைகளையும் அதிகப்படியான நகைகளையும் அணிவதை தவிர்க்கவும்
நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்ட உடன் பதட்டப்படாதீர்கள்
அமைதியான முறையில் நேர்முகத் தேர்வினை எதிர்கொள்ளுங்கள்
நேர்முக அறைக்குள் சென்ற உடன் அனைவருக்கும் வணக்கம் தெரிவியுங்கள்
அமர சொல்லிய பின்  நன்றி கூறி சத்தமின்றி நாற்காலியினை நகர்த்தி அமரவும்
நாற்காலியில் அமரும் பொழுது நேராக அமரவும்.  சாய்து அமர்வது, தளர்வாக அமர்வது போன்றவற்றினை தவிர்க்கவும்
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தெரியவில்லை எனில் தெரியவில்லை என்று கூறவும்.  தவறாக பதிலளிக்க வேண்டாம்
கேள்விகள் குறித்த விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.
மதரீதியான, உணர்வு ரீதியான கேள்விகளில் விவாதங்கள் வேண்டாம்,  இப்பகுதியில் தங்களின் சொந்த கருத்துக்களை தவிர்த்தல் நலம்.

பொதுவாக நேர்முகத் தேர்வில் கீழ்கண்ட கேள்விகள் கேட்கப்படலாம்
1)   தனிப்பட்ட கேள்விகள்
  தங்களின் பெயர் என்ன
2)   குடும்பம் தொடர்பான கேள்விகள்
தந்தை, தாயார் மற்றும் சகோதர, சகோதரிகளின் கல்வித் தகுதி, மாத வருமானம் போன்றவை கேட்கப்படலாம்
 3)  தாங்கள் எந்த மாவட்டத்தினை சேர்ந்தவர் தங்களின் ஊர் என்ன
இப்பகுதியில் தங்கள் மாவட்டத்தினைப் பற்றி தெளிவாக அறிந்திருத்தல் வேண்டும்.  உதாரணமாக சேலம் மாவட்டத்தை சார்ந்தவராக இருப்பீர்களாயின் தாங்கள் மேட்டூர் அணை கட்டப்பட்ட வருடம், எந்த இரண்டு மலைகளுக்கு இடையில் அணை கட்டப்பட்டுள்ளது. அணையின் நீளம், உயரம், கொள்ளளவு, இதுவரை எத்தனை முறை முழு கொள்ளவினை எட்டியுள்ளது, கடைசியாக எப்பொழுது அணை நிரம்பியது.  ஸ்டான்லி நீர்த்தேக்கம் என பெயர் வரக்காரணம், அணை கட்டியபொழுது சென்னை ஆளுநராக பணியாற்றியவர் போன்ற தகவல்களை அறிந்திருத்தல் வேண்டும்.  மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற இடங்கள்  உதாரணமாக ஏற்காடு,  மலையின் உயரம், ஏற்காட்டின் உயரமான சிகரம், அண்மையில் எத்தனையாவது கோடை விழா நடைபெற்றது. ஏற்காடு ஏரி கடைசியாக எப்பொழுது செப்பனிடப்பட்டது போன்ற கேள்விகளை தாங்கள் எதிர்கொள்ள நேரிடலாம்.  மேலும்தங்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசின் திட்டங்கள் சாதனைகள் குறித்த கேள்விகள் கேட்கப்படலாம்

4) தாங்கள் பயின்ற பள்ளியின் பெயர்
5)  எந்த கல்லூரியில் படித்தீர்கள்
கல்லூரியின் பெயர், தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு, கல்லூரியில் பயின்ற புகழ்பெற்ற நபர்கள் போன்றவர்களை அறிந்திருத்தல் வேண்டும்
6)  தங்களின் பாடப்பிரிவு ( Major ) எது
பாடப்பிரிவுகளில் தனிகவனம் செலுத்தி குறிப்புகளை எடுத்துக்கொள்ளவும்.  பாடப்பிரிவுகள் சம்மந்தமாக கேள்விகள் மிகவும் ஆழமாக இருத்தல் வேண்டும்.  தங்கள் பாடப்பிரிவு தொடர்பான நடப்பு  நிகழ்வுகளையும் அறிந்திருத்தல் வேண்டும்.  உதாரணமாக தாங்கள் பொருளாதார பாடப்பிரிவினை சார்ந்தவராக இருப்பீர்களாயின் இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றவர் அவருக்கு எதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது போன்றவை அறிந்திருத்தல் நலம்
7)  நடப்பு செய்திகள்
     இப்பகுதியில் அண்மைகால நடப்பு நிகழ்வுகள் குறித்த கேள்விகள் இடம் பெறும்.  உதாரணமாக அண்மையில் நடைபெற்ற மக்கள்புரட்சிகள், சூரிய கிரகணம், நிலநடுக்கம், வெள்ளம், விருதுகள், மத்திய மாநில அரசால் அண்மையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், பட்ஜெட் போன்ற கேள்விகளை எதிர்கொள்ள நேரிடலாம்
8)  தற்பொழுது தாங்கள் பணிபுரிந்து வருகிறீர்களா
     ஆம், எனில் தங்களின் பணி குறித்த விபரங்கள், தங்களின் நிறுவனம் பற்றிய செய்திகளை அறிந்திருத்தல் வேண்டும்
9)  தாங்கள் விண்ணப்பத்தில் தேர்வு செய்துள்ள பணி
     இப்பகுதியில் தாங்கள் நேர்முகத் தேர்வின் போது அளிக்கப்படும் படிவத்தில் அளித்துள்ள பணி முன்னுரிமை குறித்து கேள்விகள் எழுப்பப்படும். 
உதாரணமாக தாங்கள் வருவாய் ஆய்வாளர் பணிக்கு முன்னுரிமை அளித்துள்ளீர்கள் எனில் அத்துறையின் தற்போதைய அமைச்சர், செயலாளர் யார், துறையின் நிர்வாக அமைப்பு தாங்கள் எதற்காக இப்பணியி தேர்வு செய்துள்ளீர்கள், இப்பணியின் கடமை என்ன, தாங்கள் இப்பணியில் எவ்வாறு சிறப்பாக செயல்படுவீர்கள் போன்ற கேள்விகள் கேட்கப்படலாம்
10)  தங்களின் பொழுது போக்கு
     இதில் தாங்கள் குறிப்பிடும் பொழுது போக்கினை பற்றி கேள்விகள் இடம் பெறும்.  பொதுவாக டி.வி. பார்ப்பது, இசை கேட்பது போன்றவற்றை தவிர்த்தல் நலம்.  உதாரணமாக தாங்கள் கிரிக்கெட் விளையாட்டினை பொழுதுபோக்காக குறிப்பிட்டிருந்தீர்கள் எனில் அண்மையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளைப் பற்றி அறிந்திருத்தல் வேண்டும்.  மேலும் சாதனைகளை மேற்கொண்ட வீர்களைப் பற்றியும் அவர்களது சாதனைகளைப் பற்றியும் அறிந்திருத்தல் வேண்டும். 

No comments:

Post a Comment